Chennai Property Tax Rebate Latest News: சென்னையில் பெண்களின் பெயரில் வீடுகளை வாங்கினால் சொத்து வரியில் 50% தள்ளுபடி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். பெண்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள்:

சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், அனைவருக்குமான வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு. தமிழகத்தில் அமல்படுத்திய பல்வேறு திட்டங்கள், பின்னாட்களில் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சத்துணவு திட்டம், பெண்களுக்கு சொத்துரிமை, பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

சொத்து வரியில் 50 சதவிகிதம் தள்ளுபடி (Tax rebate):

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு சொத்து வரியில் 50 சதவிகிதம் தள்ளுபடி (Tax rebate) வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து மேயர் பிரியா பேசுகையில், "பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு சொத்து வரியில் தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற கவுன்சிலர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்" என்றார்.

சொத்து வரி பதிவு கட்டணம் (Property registration charges):

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கான பதிவு கட்டணத்தை குறைத்து தமிழக அரசு சமீபத்தில்தான் அரசாணை (GO) வெளியிட்டது. 10 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, பதிவு கட்டணம் 1 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து பேசிய திமுக கவுன்சிலர் டி. வி. செம்மொழி, "பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு சொத்து வரியில் 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதை உறுதி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி முயற்சி எடுக்க வேண்டும். இது, பெண்களை மேம்படுத்தும். வரி தள்ளுபடியால் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவாக ஆராய வேண்டும்.

சொத்துகள் யார் பெயரில் அதிக அளவில் பதிவு செய்யப்படுகின்றன?

வரி தள்ளுபடி வழங்க தமிழக அரசு முடிவு செய்தால் சென்னை மாநகராட்சிக்கு வருவாயில் பெரும் இழப்பு ஏற்படும். இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகள் அதிகரிக்கும்" என்றார்.

சென்னை மாநகராட்சி தரவுகளின்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 30 சதவிகிதத்திற்கும் குறைவான சொத்துகளே பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சொத்து வரியில் 50 சதவிகிதம் வரி தள்ளுபடி வழங்கினால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

சென்னையில் ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சொத்து வரியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், சொத்து வரியால் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு, 600 கோடி ரூபாயாக இருந்த சொத்து வரி வருவாய் கடந்தாண்டு 2,000 கோடி ரூபாயாக உயர்ந்தது.