80ஸ், 90ஸ் காலகட்டத்தில் கிட்ஸ்கள் முதல் இளவட்டங்கள் வரை மட்டுமல்லாமல் தாத்தா பாட்டி வரை அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு எபிக் கிளாசிக் திரைப்படம் தான் 'கரகாட்டக்காரன்'. இந்தப் படத்தை இப்போது டிவியில் போட்டாலும் ரிமோட்டுக்கு வேலையே கொடுக்காமல் கவனத்தை சிதறவிடாமல் பார்க்கும் ரசிகர் கூட்டம் இன்னும் இருக்கிறது. அந்த அளவுக்கு படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் அல்டிமேட்டான காமெடி, ஆக்ஷன், சஸ்பென்ஸ் என அனைத்தின் கலவையாக வெளியான இந்த கம்ப்ளீட் என்டர்டைன்மெண்ட் திரைப்படம் இன்றுடன் 35 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இயக்குநராக இருந்து ஹீரோவான நடிகர் ராமராஜன் கிராமிய படங்களுக்கே உரித்தான ஒரு முக லட்சணம் கொண்டவர். கங்கை அமரன் - ராமராஜன் கூட்டணியில் வெளியான எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட வெற்றிப் படங்களின் வரிசையில் டாப் நாட்ச் என்றால் அது எந்த சந்தேகமும் இன்றி 'கரகாட்டக்காரன்' தான். அந்தக் காலத்து 'தில்லானா மோகனாம்பாள்' கதையின் உல்டா தான் இந்தப் படத்தின் மையக் கதை. அதில் முதலில் மோதல் பிறகு காதல், போட்டி, தாய் பாசம், சென்டிமென்ட், பிரிவு, ரொமான்ஸ், கிராமத்து வில்லனாக பண்ணையார் இப்படி எதார்த்தத்தை சேர்த்து கலந்து ஒரு உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ் கொடுத்து ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான அனைத்து ஃபார்முலாவையும் பயன்படுத்தி உச்சகட்ட வெற்றியை பெற்றது.

படத்தில் கவுண்டமணி - செந்தில் - கோவை சரளா அட்ராசிட்டி இன்று வரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் அத்துப்படி. அதிலும் அவர்களின் வாழைப்பழ காமெடி, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாக, சொப்பன சுந்தரி கார், ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் உள்ளிட்ட அல்டிமேட் டைமிங் காமெடிக்கு இன்றும் மவுசு குறையவேயில்லை.

அண்ணாமலை, பாட்ஷா, முத்து, நாட்டாமை, சூர்யவம்சம், அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட ஒரு சில படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் வசனங்களும் மனப்பாடமாக இன்று வரை நினைவில் இருக்கும். அந்த வரிசையில் கரகாட்டக்காரன் படத்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. கண்ணழகி கனகாவுக்கு இது தான் அறிமுக படம். அந்தக் கண்களை உருட்டி உருட்டி, தலையை ஆட்டி அவர் வெடுக்கென பேசி ரசிகர்களை கவர்ந்தார்.

இளையராஜாவின் இசைக்கும் 'கரகாட்டக்காரன்' படத்தின் வெற்றிக்கும் முக்கியமான பங்குண்டு. படத்தின் அவுட்லைன் கூட தெரியாமல் சூழலை வைத்தே கிடைக்கும் நேரத்தில் இந்தப் படத்திற்கு மெட்டமைத்துக் கொடுத்துள்ளார் இளையராஜா. படத்திற்கு பின்னணி இசையும் அத்தனை உயிரோட்டமாக அற்புதமாக அமைந்து இருந்தது. இன்றும் மாரியம்மா மாரியம்மா... பாடல் இடம் பெறாத திருவிழாக்கள் இல்லை எனலாம்.

நாட்டுப்புற இசையை சினிமாவின் பாணியில் வழங்குவதில் இளையராஜாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்த ஒரு படம். எந்த அளவுக்கு இப்படத்தில் பாடல்கள் பிரமாண்ட வெற்றி பெற்றன என்பது ஊர் அறிந்தது. அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உள்ள வரை தமிழ் ரசிகர்களால் நிச்சயம் இந்த ஜனரஞ்சகமான கரகாட்டக்காரன் படம் கொண்டாடப்படும்.