தமிழ் சினிமாவில் எத்தனையோ வெரைட்டி ஆஃப் காதல் படங்களை கடந்து வந்துள்ளோம். அது அனைத்திலும் இல்லாத ஒரு புதுமையான சிந்தனையை புகுத்தியவர்தான் இயக்குநர் அகத்தியன். அது தான் பார்க்காத ஒருத்தருக்காக மனதிலேயே கோட்டை கட்டி காதலித்த 'காதல் கோட்டை' திரைப்படம்.

1996ம் ஆண்டு சூர்யாவாக அஜித்தும் கமலியாக தேவயானியும் வாழ்ந்த இந்த அற்புதமான காதல் காவியம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

காலங்களை கடந்தும் ஒரு சில படங்கள் மனதில் நிலைத்து நிற்க ஒரே ஒரு காரணம் என்றால் பார்வையாளர்களின் மனதை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை பொறுத்தே அமையும். இன்றைய காலகட்டம் போல் அல்லாமல் தெருவுக்கு ஒரு ஃபோன் பூத், போஸ்ட் மேன் மூலம் வரும் லெட்டர், எப்பவாவது பார்க்கும் அந்த சமயத்தில் பார்வையிலேயே பேசி கொள்ளும் தருணம், கலப்படமில்லாத உண்மையான உணர்ச்சிகளை பரிமாறிக்கொண்ட அந்த காலத்திலேயே பார்க்காமல் காதல் என்ற புது கான்செப்டை படமாக்கி உறையவைத்த ஒரு படம்.

தரமான திரைக்கதை கொண்ட படங்கள் என்றுமே ரசிகர்களின் நன்மதிப்பை பெரும் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் 'காதல் கோட்டை'. ஹீரோ ஹீரோயின் இருவருமே லெட்டர் மூலம் பரஸ்பர மரியாதையையும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதும் மெல்ல மெல்ல காதலாக மலர்கிறது. இதயத்தில் தொடங்கி கண்களில் முடியும் காதலாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள்.

சில சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் சந்தித்து கொண்டாலும் அது கசப்பான அனுபவங்களாகவே முடிகிறது. ஒரு கட்டத்தில் அந்த உணர்வு மறைந்து பரிவு ஏற்படும் சமயத்தில் இவர் தான் இத்தனை நாட்களாக தான் தேடிய அந்த காதலர் என்பதை ஹீரோயின் தெரிந்துகொண்டு இணையும் அந்த கிளைமாக்ஸ் காட்சி அத்தனை உணர்வுபூர்வமாக அமைந்து இருந்தது.

நிஜத்தில் சாத்தியமாகுமா என இல்லாமல் இயல்பாக தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களுடன் அதை தொடர்புபடுத்தி ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது அகத்தியனின் திரைக்கதை.

அஜித், தேவயானிக்கு இப்படம் மிகப்பெரிய டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது. அவர்களின் கேரியர் கிராஃப்பை பல மடங்கு உயர்த்தியது. துணை கதாபாத்திரங்களில் நடித்த தலைவாசல் விஜய், கரண், இந்து, சபீதா, ராஜீவ், பாண்டு, ஹீரா, மணிவண்ணன், ராஜா என அனைவருமே படத்தில் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.

தேவாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே எக்காலத்திலும் ரசிக்க கூடிய பாடல்களாக அமைந்தன. நலம் நலமறிய ஆவல்... பாடல் இன்றும் பலரின் பிளேலிஸ்டில் இடம் பெற்று இருக்கும் இனிமையான பாடல். உணர்வுபூர்வமான பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு உயிரூட்டியது.

சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய விருதை பெற்றாலும் தமிழ் திரைப்படத்துக்காக முதல் முறையாக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றவர் அகத்தியன் என்ற வரலாற்று பெருமைக்குரியவர்.