பொதுவாக வேலை என்று எடுத்துக் கொண்டால் அரசு வேலையை உயர்வாக கருதும் மனநிலை இன்றும் இருந்து வருகிறது. அரசு வேலையை காட்டிலும் தனியார் துறையில் அதிக அளவு ஊதியம் கொடுக்கப்பட்டாலும், அரசு வேலையில் இருக்கும் நிரந்தரம் என்ற ஒரு வார்த்தை அரசு வேலையை கனவை நோக்கி பலரையும் அழைத்துச் செல்கிறது.

காஞ்சிபுரத்தில் முன்மாதிரியான பள்ளி

அதேபோன்று தனியார் துறையில் அதிக அளவு உழைப்பு செலுத்த வேண்டும், உழைப்பிற்கான மதிப்பு கிடைக்காது என்பதும் பொதுவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு சில தனியார் நிறுவனங்கள் விதிவிலக்காக இருந்து வருகின்றன.

குறிப்பாக பல ஆண்டுகாலம் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு, ஒரு சில நிறுவனங்கள் மிகப்பெரிய கௌரவத்தையும், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் வழங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 25 ஆண்டு காலமாக, ஒரு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்ற ஆசிரியை, காஞ்சிபுரம் அடுத்த ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இயற்பியல் பாடப்பிரிவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி

இந்நிலையில், பள்ளியின் உரிமையாளர் அருண்குமார் அவர் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நம்பிக்கையாவும் மாணவர்களின் எதிர்காலத்தில், கருத்தில் கொண்டு பணியாற்றி வரும் ஆசிரியர் சரவணனுக்கு நினைவு பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டு காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆசிரியர் சரவணனுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டிக் கொடுத்து ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளியில் உரிமையாளர்.

உரிமையாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

இன்று புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து ஆசிரியருக்கு வீட்டின் சாவியை வழங்கி கௌரவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியருக்கு நன்மதிப்பை பெறும் வகையில், புதிய வீடு கட்டிக் கொடுத்த உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மேலும், பள்ளியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அடுத்து, வரும் ஆண்டுகளில் புதிய வீடு கட்டும் பணி துவங்கப்படும் என பள்ளியின் உரிமையாளர் அருண்குமார் தெரிவித்தார்.