மேற்குவங்க அரசு பள்ளி பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு வேலை பெற்ற 25,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது, மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தேர்வு முறையே நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் மோசடி நடந்ததாகவும் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி. வி. சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

பணம் பெற்று கொண்டு அரசு வேலை தரப்பட்டதா?

மேற்குவங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் 24,000 காலியிடங்களுக்கான அரசு பணி தேர்வில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இதில், பணம் பெற்று கொண்டு பலருக்கு அரசு வேலை தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெரும்பாலான தேர்வர்களுக்கு OMR தாள்களை தவறாக மதிப்பீடு செய்த பின்னரே வேலைகள் வழங்கப்பட்டன என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த 24,000 பணியாளர்களின் (ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத) நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. 23 லட்சம் விடைத்தாள்களில் எவை மதிப்பீடு செய்யப்பட்டன என்பது குறித்து தெளிவு இல்லை என்றும் எனவே அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பணியாளர்களுக்கு அரசு வேலை தந்தது செல்லாது என குறிப்பிட்ட உயர் நீதிமன்றம், 24,000 பேர் பெற்ற சம்பளத்தை திருப்பித் தரவும் உத்தரவிட்டது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நியமனத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்:

மேற்குவங்கத்தின் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் உட்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கு தொடர்பாக சிறையில் உள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாய்மொழி வாதங்களின் அடிப்படையிலும் எந்த ஒரு எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் இன்றி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக மேற்குவங்க அரசு வாதிட்டது.

இந்த நிலையில், இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி. வி. சஞ்சய் ஆகியோர் கொண்ட அமர்வு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரை உறுதி செய்தது.

"நாங்கள் உண்மைகளை ஆராய்ந்தோம். இந்த வழக்கை பொறுத்தவரை, முழு தேர்வு நடைமுறையும் நேர்மையற்ற முறையில் நடத்தப்பட்டது. மோசடி நடந்துள்ளது. நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. நியமனத்தில் மோசடி இருப்பதால் கறைபடிந்த தேர்வர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இருப்பினும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பளத்தை திருப்பி தர வேண்டியதில்லை" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.