தஞ்சாவூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சியின் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் சாய்ரகு தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கணேசன், மாநகர செயலாளர் சதீஷ்குமார், இளைஞரணி செயலாளர் சுபாஷ், ஒன்றிய செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து மக்கள் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் சென்னையில் மார்ச் 15-ந்தேதி தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு மாநாட்டினை நடத்த உள்ளோம். தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இதனை எதிர்த்தன. ஆனால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த தேர்தல்ல பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் நடத்தை விதிமுறைகள் வரும். ஆனா தேர்தல் ரொம்ப பக்கமா அறிவிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் சின்னங்களை வரைந்து தேர்தல் பிரச்சாரங்களைத் துவக்கி விட்டார்கள். தேர்தல் மாநாடுகள், பேரணிகளை நடத்துகிறார்கள். வாக்கு சேகரிக்கிறாங்க. தற்போது தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.

கேரள மாநிலத்தில் 'நவ கேரளம்' என்று இதே மாதிரி வீடு வீடாகச் சென்று தேர்தல் பணிகளை அரசு அதிகாரிகள் மூலம் செய்ய முயற்சித்த போது நீதிமன்றம் அதைத் தடை செய்துள்ளது. அதேபோல் இங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்', 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்று இப்போ வீடு வீடாக அவங்க தேர்தல் பணிகளை அரசு அதிகாரிகள் மூலமாக செய்கிறார்கள். கேரள மாநிலத்துல நீதிமன்றம் தலையிட்டு தடை விதித்ததோ அதேபோல் தமிழகத்திலும் நீதிமன்றம் தலையிட்டு அரசு அதிகாரிகளை தேர்தல் பணிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீச தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்த கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. கரூர் சம்பவத்தில் அவர் முறையாக செயல்படவில்லை. எனவே அவரை நம்பி இளைஞர்கள் ஏமாறக்கூடாது. விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை கிடையாது. அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் டெபாசிட் இழக்கும். சட்டசபை தேர்தலுக்குப்பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்று விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.