தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அனால் அஜித் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு, இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் தான் 'விடாமுயற்சி'. ஆனால் முதல் நாளே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய இப்படம் மோசமான விமர்சனங்களுடன் படு தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் தோல்வி குறித்து, திரைப்பட விமர்சகரான வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில்: 'விடாமுயற்சி' திரைப்படம், இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனந்திக்கு ரூ.127 கோடி நஷ்டத்தை கொடுத்த திரைப்படம் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த படம் குறித்து அவர் பேசுகையில், "கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வந்த 'விடாமுயற்சி' படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா, த்ரிஷா, ஆரவ், விஜே ரம்யா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரூ.297 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அஜித்துக்கு ரூ.105 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அர்ஜூனுக்கு ரூ.7 கோடி, த்ரிஷாவிற்கு ரூ.5 கோடி, இயக்குநர் மகிழ் திருமேனிக்கு ரூ.5 கோடி, இசைமையப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடி என்று நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் சம்பளத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் ரூ.141 கோடி வரையில் செலவு செய்திருக்கிறார்.

படத்தை எடுக்க ரூ.60 கோடி செலவு செய்யப்பட்டிருகிறது. படத்தை எடுக்க வாங்கிய கடனின் வட்டி தொகை மட்டும் ரூ.70 கோடி. இந்தப் படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் ரீமேக். ஆதலால் ரீமேக் உரிமைக்காக ரூ.17.5 கோடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.90 கோடிக்கு கைப்பற்றியிருக்கிறது. சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிக்கு ரூ.30 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமை மற்றும் ஆடியோ ரைட்ஸ் என்று மொத்தமாக ரூ.156 கோடிக்கு பிசினஸ் நடந்துள்ளது. விடாமுயற்சி ரூ.137 கோடி வரையில் உலகளவில் வசூல் செய்து கொடுக்கவே, லைகா நிறுவனத்திற்கு ரூ.170 கோடி வருவாய் தான்.

ஆனால், படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடும் போது லைகா நிறுவனத்திற்கு ரூ.127 கோடி நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் திரைக்கு வந்த படங்களில் அதிக நஷ்டத்தை கொடுத்த படங்களில் விடாமுயற்சி ரூ.127 கோடியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

ஆனால், அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டில் திரைக்கு வந்த 'குட் பேட் அக்லி' உலகளவில் ரூ.242 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் தவிர டிராகன், மத கஜ ராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெற்றி கொடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.