10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி இன்று (செப். 3) தொடங்கி உள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேர்வு விவரங்கள்

மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படித்த, பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுகு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடந்தது. நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் எழுதினர். இந்த மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 16ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகள் மற்றும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். அதாவது 91.55% பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதற்கிடையே மாணவர்கள் ‌ www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களைப் பெற்றனர். குறிப்பாக,‌ தங்களது பிறந்த தேதி, பதிவெண்‌ ஆகிய விவரங்களை அளித்து தாங்களே பதிவிறக்கம்‌ செய்து கொண்டனர்.

ஜூலை மாதத்தில் துணைத் தேர்வு

தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டுக்கான அறிவிப்பு வெளியாகி, அவை நடந்தன. ஜூலை மாதத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

அசல் மதிப்பெண் சான்றிதழில் தாமதம்

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. எனினும் இதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

சான்றிதழைப் பெறுவது எப்படி?

பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளியிலும்‌, தனித் தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என்று அரசுத் தேர்வுகள் மையம் அறிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/