2024-25ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை தொடங்கும் நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடக்கிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 27) முடிவடைகிறது. தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 28ஆம் தேதி) தொடங்குகிறது. பின் ஏப்ரல் 15ஆம் தேதியும் முடிவடைகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 19 ஆம் தேதியும் வெளியாக உள்ளன. 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றது.

2024- 2025ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மார்ச் 14 அன்று வெளியிட்டது.

எத்தனை பேர் எழுதுகின்றனர்?

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 4,113 மையங்களில் உள்ள 9,13,084 பேர் எழுதுகின்றனர். இதில், 4.46 லட்சம் மாணவர்களும் 4.40 லட்சம் மாணவிகளும் அடக்கம். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித் தேர்வர்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் உள்ளனர்.

பொதுத்தேர்வு கண்காணிப்பாளர்கள் யார் யார்?

10ஆம் வகுப்புத் தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 48,500 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,800-க்கும் மேற்பட்ட நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள் என்னென்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகங்களுக்கு…

9498383075 / 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in