கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ, பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசிய அவர், மின்சாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் துறையில் உள்ள இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், டெண்டர் தொடர்பான முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார். நிதிநிலையை கருத்தில் கொண்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடி வழங்க முடியும் என்பதே அரசின் தற்போதைய நிலைப்பாடு என கூறினார்.

தவெக தலைவர் விஜய் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதல்வர் விஜய் பொறுப்பேற்று மூன்று வாரங்களே ஆகியுள்ளன. அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சீரமைத்து, தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை செயல்படுத்த அவருக்கு சில கால அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் போதைப்பழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து பேசிய துரை வைகோ, கடந்த சில காலமாக பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், வரும் காலங்களில் அரசு போதை கலாச்சாரத்தையும் குற்றச் செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அரசியல் கூட்டணி குறித்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். திமுக சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தற்போதும் திமுகவுடனேயே பயணித்து வருகிறோம்” என்றார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கடந்த காலத்தைப் போலவே இருப்பதாகவும், 100 சதவீதம் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.