தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அயோத்திப்பட்டியில் பெண்ணை வழிமறித்து 10 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர் மாதாக்கோட்டைரோடு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி சத்தியபாமா. பூதலூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 09/03/2020 தேதி காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து தனது ஸ்கூட்டியில் பூதலூருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அயோத்திப்பட்டி பிரிவு சாலை அருகில் வந்தபோது அவரது ஸ்கூட்டியை 2 பேர் நிறுத்தி முகவரி விசாரிப்பது போல் நடித்துள்ளனர். தொடர்ந்து சத்தியபாமா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலி செயினை இருவரும் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சத்தியபாமா இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி பொன்மலை எம்.சண்முகம், திருச்சி பாலக்கரை எஸ். அருள்பிரகாசம் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு தஞ்சாவூர் ஜேஎம்.3 கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி விசாரணை செய்து சண்முகம் மற்றும் அருள்பிரகாசத்திற்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

பெண்ணிடம் நகை பறித்து சென்ற 2 பேர் கைது

ஒரத்தநாட்டில் கடந்த மாதம் 19ம் தேதி பைக்கில் சென்ற பெண்ணை தள்ளிவிட்டு 10 பவுன் நகை பறித்துச் சென்ற இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (42).

இவர் கடந்த மாதம் 19ம் தேதி ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டியில் திரும்பி சென்று கொண்டிருந்தார். ஒரத்தநாடு பி.எட் காலேஜ் அருகே தமிழ்செல்வி ஸ்கூட்டியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென தமிழ்ச்செல்வியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியை சேர்ந்த வீரமணி (25) மற்றும் அவரது நண்பர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோவில் குளம் ஆயக்காரன்புலன் பகுதியைச் சேர்ந்த வீரசேகர் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் வீரமணி, வீரசேகர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 9 பவுன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த நபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியிலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.